×

இந்திய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி; முதல் இன்னிங்சில் 55 ரன்களுக்கு சுருண்ட தென்னாப்பிரிக்கா!

கேப்டவுன்: இந்திய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 55 ரன்னில் சுருண்டது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 31 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20, ஒருநாள் போட்டித் தொடர்களைத் தொடர்ந்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. செஞ்சுரியனில் நடந்த முதல் டெஸ்ட்டில் தென் ஆப்ரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 1-0 என முன்னிலை பெற்றது. இந்நிலையில் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கேப் டவுனில் இன்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டீன் எல்கர் பந்துவீச்சை தேர்வு செய்தார். தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதல் டி20 போட்டியை தவிர, ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டி என அனைத்திலும் டாஸில் தோல்வியடைந்துள்ளது. அனைத்திலும் தென்னாப்பிரிக்க அணியே டாஸ் வென்றுள்ளது.

இதன்படி முதல் இன்னிங்சில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி தொடக்கம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வந்தது. அந்த அணி 5 ரன்கள் எடுத்திருந்தபோது மார்க்ரம் 2 ரன்களுக்கு அவுட் ஆகி விக்கெட் வீழ்ச்சியின் கணக்கை துவக்கி வைத்தார். அவருடன் களமிறங்கிய கேப்டன் டீன் எல்கர் 4 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த வீரர்கள் இந்திய அணியின் அசத்தலான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 55 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா இதுவரை இல்லாத குறைந்த ஸ்கோரை பதிவு செய்தது. இந்திய அணி சார்பில் முகமது சிராஜ் 15 ரன்களை கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். டெஸ்ட் போட்டிகளில் மூன்றாவது முறையாக முகமது சிராஜ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்திய அணி வீரர்கள் முகேஷ்குமார், பும்ரா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து இந்திய அணி களமிறங்கி விளையாடி வருகிறது. இந்திய அணி 5 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 31 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரன் ஏதும் எடுக்காமல் றபட பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

The post இந்திய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி; முதல் இன்னிங்சில் 55 ரன்களுக்கு சுருண்ட தென்னாப்பிரிக்கா! appeared first on Dinakaran.

Tags : India ,South Africa ,Cape Town ,Indian ,Dinakaran ,
× RELATED இந்தியா – தென் ஆப்ரிக்கா இடையே...